கர்த்தருடைய வேதம்

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

தேவனுடைய வழி உத்தமமானது; ,கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.

கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.

உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.

கர்த்தாவே, இராக்காலத்தில் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.

நானோ, உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன். நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன். அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.

நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.

உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்.

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.

வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன். என் மறைவிடமும் என் கேடகமும் நீரே; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.

உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.

அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன். உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்.

உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.

கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.

இயேசு: ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.



சங்கீதம் 1: 2 / சங்கீதம் 18: 30 / சங்கீதம் 19: 7 / சங்கீதம் 119: 1 / சங்கீதம் 119: 18 / சங்கீதம் 119: 55
சங்கீதம் 119: 70-72 / சங்கீதம் 119: 77 / சங்கீதம் 119: 97 / சங்கீதம் 119: 105 / சங்கீதம் 119: 113, 114 சங்கீதம் 119: 130 / சங்கீதம் 119: 147,148 / சங்கீதம் 119: 165 / சங்கீதம் 119: 174 / யோவான் 6: 63