நீயுனக்குச் சொந்தமல்லவே

பல்லவி

நீயுனக்குச் சொந்தமல்லவே; மீட்கப்பட்ட பாவி,
நீயுனக்குச் சொந்தமல்லவே.

அனுபல்லவி

நீயுனக்குச் சொந்தமல்லவே,
நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம். --- நீ

சரணங்கள்

1. சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே; திருரத்தம், ரத்தம்
திரு விலாவில் வடியுது பாரே;
வலிய பரிசத்தால் கொண்டாரே;
வான மகிமை யுனக்கீவாரே. --- நீ

2. இந்த நன்றியை மறந்து போனாயோ? யேசுவைவிட்டு
எங்கேயாகிலும் மறைந்து திரிவாயோ?
சந்த தமுனதிதயங் காயமும்,
சாமி கிறிஸ்தினுடைய தல்லவோ? --- நீ

3. பழைய பாவத்தாசை வருகுதோ? பசாசின்மேலே
பட்சமுனக்குத் திரும்ப வருகுதோ?
அழியும் நிமிஷத் தாசை காட்டியே,
அக்கினிக்கடல் தள்ளுவானேன்? --- நீ

4. பிழைக்கினும் அவர்க்கே பிழைப்பாயே; உலகைவிட்டுப்
பிரியினும் அவர்க்கே மரிப்பாயே,
உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்,
உயர்பதவியில் என்றும் நிலைப்பாய். --- நீ